Saturday, 1 April 2017

க்ஷத்திரியர் என்பது ஒரு ஜாதியா? பகுதி - 3 - Pandyan Mallar



உழவு தொழில் செய்தவர்கள் சூத்திரர் என்றால், அதே தொழிலை செய்த மன்னனையும் சூத்திரன் என்றுதான் கூறவேண்டும். ஆனால் சில வரலாற்று அறிஞர்கள் உழவு தொழில் செய்த வேளாளரை சூத்திரர் என்றும் அதே தொழிலை செய்த மன்னனை க்ஷத்திரியர் என்று கூறுகின்றனர். இது முரண்பட்ட கருத்தாகும்.


சமஸ்கிருதத்தில் வழங்கும் ஒரு முக்கியப் பழமொழி, "பிறப்பால் அனைவரும், சூத்திரரே, குணத்தினால்தான் பிராம்மணன், க்ஷத்திரியன், வைஸ்யன்" என்றாகின்றனர்’ என்கிறது.


இதை மெய்பிக்கும் விதமாக வரலாற்றிற்க்கு முந்தைய காலம் தொட்டு சூத்திரர் என்று அழைக்கப்பட்ட பல மன்னர்கள் ஆட்சி செய்துள்ளனர்.


இதேபோல் உழவு தொழில் செய்த பலர் மன்னர்களாகவும், வேந்தர்களாகவும் இருந்துள்ளனர். இதை புரிந்துகொள்ளாமல் மன்னர்கள் க்ஷத்திரியன் என்றும் வேளாளர்கள் சூத்திரர் என்றும் சிலர் கதை சொல்வதால் எந்த பயனும் இல்லை.

உதாரணமாக,

1. கி.பி. 1448 –இல் அரிகேசரி பாராக்கிரம பாண்டியன் பொன்னேர் பூட்டி உழுது (கரிழ்சனை) விழா நடத்தினான்.

(தென்னிந்திய கல்வெட்டுகள் 26 / 537, 561)

2. கரிகால் சோழன் கட்டிய பேரூர் கோயில் வரலாற்றைக்கூறும் பேரூர் புராணம் - பள்ளுப் படலம்

செய்யுள் 26


"இந்திரன் பிரம னாரணன் முதலா மிமையவர் நு கமல மேழி
 
வெந்திறந் கொழுவார் கயிறுகோல் பகடு வித்துநா றனைத்துமாயங்கு
 
வந்தனர் பயில வன்கண நாத ரேவல்செய் மள்ளராய் விரவி
 
முத்துறும் பட்டிப் பள்ளனை யடுத்து மொழி வழி வினை தொடங்கினரால்"
  


இந்திரன், பிரமன், திருமால் முதலாகவுள்ள தேவர்கள் நுகம், கலப்பை, மேழி, கொழுவு, கயிறு, தார்க்கோல், இடுபொருட்கள் ஆகியவற்றுடன் வந்தார்கள். மள்ளராய் முன்னே செல்லும் பட்டிப் பள்ளனாகிய சிவ பெருமானைத் தொடர்ந்து விரைந்து வந்து அவரின் ஏவல்படி வேளாண் தொழில் செய்யத் தொடங்கிய செய்தியை மேற்கண்ட செய்யுளடிகள் விளக்குகின்றன.


3. மலையத்துவசப்பாண்டியனுக்கும், சூரசேன சோழனின் மகளான காஞ்சனமாலைக்கும் பிறந்தவளே தாடாதகைப் பிராட்டி என்னும் மதுரை மீனாட்சி ஆவாள். அவள் தெய்வநிலையை அடைந்தபோதிலும் அவள் நிணைவாக மதுரையில் தை மாதம் தெப்பத் திருவிழா பன்னெடுங்காலமாக நடைபெற்று வருகிறது.

அனுப்பானடிப் பள்ளர்கள் உழவு செய்து நெல் விளைவித்து அறுவடைக்காகக் காத்திருக்கும் பள்ளர்கள் வயலில் மதுரை மீனாட்சி இறங்கிக் கதிர் அறுக்கப் பள்ளத்தியராக தேரில் ஏறி வருகிறாள் மேலும் வயலில் இறங்கி நெற்கதிர்களை அறுக்கிறாள். இந்நிகழ்வு பாண்டிய இளவரசி தான் ஒரு வேளாண் குடும்பத்தைச் சார்ந்தவள் என்பதை நிணைவூட்டுகிறது.


4. தென்கொரியாவில் வேளாண் தொழிலை கற்றுக்கொடுத்த பாண்டிய நாட்டு இளவரசியை தெய்வமாக இன்றுவரை வணங்கிவருகின்றனர். அவள் கையில் நெற் கதிருடன் தெய்வமாக காட்சியளிக்கிராள்.


5. ஜனக மஹாராஜ சூரிய குல க்ஷத்ரியராகக் கருதப்படுகின்ற போதிலும் அவர் ஏர் பிடித்து உழவு செய்யும் போதுதான் சீதா தேவி கிடைக்கப்பெற்றால் என்று ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


6.  சாக்கிய கூட்டத்தைச் சேர்ந்த புத்தரின் தந்தை க்ஷத்ரியராகக் கருதப்படுகின்ற போதிலும் அவர் ஏர் பிடித்து உழுததாக வரலாற்றுக் குறிப்பு உள்ளது.

இச்சாக்கிய இனத்தார் வைதீக மத ஒழுக்கம் உடையவர்களாகவும் தோன்றவில்லை. தேவைப்பட்ட நேரத்தில் ஆயுதம் தாங்கிப் போராடும் கூடித்திரியர்களாயினும், சாக்கியர்கள் பயிர்த் தொழிலையும் செய்தனர். புத்தருடைய தந்தை உட்பட எல்லா சாக்கியர்களும் ஏர்பிடித்து உழுதவர்களே”

( டி.டி.கோசாம்பி.)


7. ஹமுராபி பிறந்த ஆண்டு எதுவென்று நிச்சயமாகத் தெரியவில்லை என்றாலும் கி.மு.1764 – ல் அவர் அரியணையில் அமர்ந்து ஆட்சி புரிந்தது உண்மை என்றும், அவர்கள் வேளாண் குடியிலிருந்துதான் வந்தவர் என்பதும் வரலாற்றார் முடிவு.


8. 7. 5. 2004 அன்று கம்போடியா நாட்டின் இளவரசர் சிசோவாட் சிவ்வோன் மோனிராக் அவர்கள் தலைநகர் நாம்பென்னில் ஒரு வயலில் பொன்னேர் பூட்டி உழுது வேளாண் பருவத்தில் விவசாய வேலையைத் தொடங்கி வைக்கிறார்.

( THE HINDU – 8 . 5 . 2004 )


9. கி.பி. 1244 ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டம் வாகீசுவரர் கோயில் கருவரை தென் மேற்கு ஜகதியில் உள்ள வீரராசேந்திரன் சோழன் கல்வெட்டு வடகரை நாட்டுப் பட்டில் ஊரும், ஊராளிகளும் வாகீசுவரருக்குப் பசுங்கண்ணீத் தாழை என்று பெயர் உள்ள ஏரியையும், ஏரி நீர் பாயும் நிலத்தையும் கொடையாகக் கொடுத்தனர். அந்நிலத்தைக் கோயில் காணியுடைய பிராமணர் பாலாசிரிய கோத்திரம் பொல்லாத பிள்ளை மகன் மாதேவ பட்டனும், காணியுடைய உவச்சர் பாரசிவர் பூமன் வன்னியான வீரபத்திரச் சக்கரவர்த்தியும் உழுது மூன்றில் ஒன்று வாகீசுவரர்க்கு மேல்வாரமாகக் கொடுக்க வேண்டும் என கூறுகிறது.

(த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண்: 96 / 2005 - ஈரோடு மாவட்ட கல்வெட்டுகள்)


10. கி.பி. 1237 ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டம் வாகீசுவரர் கோயில் தெற்கு, கிழக்கு பட்டிகையில் உள்ள வீரராசேந்திரன் சோழன் கல்வெட்டு வடகரை நாட்டுப் பட்டில் ஊராளிகளும், நடுவில் நித்யகண்டச் சக்கரவர்த்தியும் வாகீசுவரர் கோயிலில் பணிபுரியும் பூசிக்கும் நம்பியார் பட்டில் காணியாளருக்கும், மாணபோகத்துக்கும் பட்டில் காணியாள உவச்சரில் பாரசிவர் பூமன் வன்னியான வீரபத்திரச் சக்கரவர்த்திக்கும் மாணபோகமாக நிலம் கொடையாகக் கொடுத்தனர்.


(த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண்: 98 / 2005 - ஈரோடு மாவட்ட கல்வெட்டுகள்)

காணியாளர் என்பது வேளாண் குடியை குறிக்கும் சொல்லாகும்.


11. தொண்டைமான் சக்கரவர்த்திக்கும் விசுவாவசுராசனுக்கும் போர் நடந்தது. விசுவாவசுராசனே தொண்டை மண்டலத்தை வென்ற முதல் பல்லவனாக இருக்கலாம் என்ற செய்திகள் கர்னெல் மக்கென்சி எழுதியுள்ள குறிப்புகளில் காணப்படுகிறது. இங்ஙனம் கைப்பற்றிய நாட்டில், மக்களை இன்புறச் செய்யவும் நாட்டில் அமைதியை உண்டாக்கவும் பப்பதேவன் என்னும் அரசன் ஓர் இலக்கம் (இலட்சம்) கலப்பைகளையும் பிறவற்றையும் தந்தான் என்று செப்பேடு கூறுகிறது.

(Vide D. Sircar’s Successors of the Satavahanas. P.183 – 184 and Dr. G. Minakshi’s “Administration and social Life under the Pallavas PP. 6 -10)

அரசன் பப்பதேவன் ஓர்இலட்சம் கலப்பைகளை (மேழி) தன் குடிகளுக்கு கொடுத்தான் என்றால் இதன் பொருள் என்னவென்பதை நீங்கள்தான் புரிந்துகொள்ள வேண்டும்.


12. கி.பி. 1224 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாவட்டம் கடத்தூர் கொங்கவிடங்கேஸ்வரன் கோயில் கருவறை மேற்குச் சுவரில் உள்ள வீரராசேந்திர சோழனின் கல்வெட்டு வீரராசேந்திர இருங்கோளன் ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து வரந்தருவான் அருளாலப் பெருமாள் அஞ்சாதகண்ட பிரமராயன் கடற்றூரில் கொங்குவிடங்கீஸ்வரர் கோயிலில் எழுந்தருளுவித்த சுப்பிரமணிய பிள்ளையார்க்கு நான்கெல்லைக்குட்பட்ட விளைநிலம் தானமாக வழங்கினான்.  இன்நான்கு எல்லைகளை குறிப்பிடும்போது சுவாமி சந்தோசப்பல்லவரையன் உழுத பதக்குக்கு மேற்க்கு என்று கூறப்பட்டுள்ளது.

(த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண்: 70 / 2004 - கோயம்புத்தூர் மாவட்ட கல்வெட்டுகள்)


13. இந்தியாவில் ஆங்கிலேயரால் க்ஷத்ரியராகக் அங்கிகரிக்கப்பட்ட பிரிவில் க்ஷத்ரிய குருமி, க்ஷத்ரிய குடுமி, பட்டேல் சமூகமும் குறிப்பிடதக்கதாகும். இவர்கள் ஒரு வேளாண் குடியைச் சேர்ந்தவர்கள் என்பதும் தமிழக குடும்பர்களின் உட்பிரிவு என்பதும் அனைவரும் அறிந்த செய்தியாகும். மேலும் இவர்கள் அவதார புருஷராக கருதப்படும் க்ஷத்ரிய இராமனின் சந்ததிகள் என்பது குறிப்பிடத்தக்கது.



மேலும், நான் கொடுத்த சான்றுகள் பல அறிஞர்களின் கருத்துகளுடன் எவ்வாறு ஒத்துப்போகிறது என்பதை கீழே கொடுத்துள்ளேன்.

ஊர் கிழவரே அரசர் குலத் தொடக்கம். ஆட்சிப் பரப்பு விரிய, விரிய, வேளிரும் மன்னரும் கோக்களும் வேந்தரும் முறையே தோன்றினர். 

(தேவநேய பாவாணர் -  தமிழர் வரலாறு – 2, பக். 96)


ஒவ்வொரு நாட்டிலும் அங்குள்ள குலத்தலைவரே அரசராவர், அரசரென்று ஒரு தனிக்குலம் இல்லை. 

(தேவநேய பாவாணர் – ஒப்பியல் மொழிநூல் – 1, பக். 16)


சாமி சிதம்பரனார் மருத நிலத்தின் தெய்வம் வேந்தன் என்று தொல்காப்பியம் கூறுகிறது. இதனால் தமிழகத்தில் மருதநிலத்தில் அரசன் இருந்தான் என்று அறியலாம். பயிர்களைச் சேதமில்லாமல் காக்கத் தோன்றிய வேளாண் விஞ்ஞானி வீரர் பரம்பரையினரே பிற்காலத்தில் அரசராயினர், வேந்தராயினர் என்று கூறுவார்.

(சாமி சிதம்பரனார் பழந்தமிழர் வாழ்வும் வளர்ச்சியும்.)



மூவேந்தர் மரபும் அற்றபின் அரசர், வணிகர், வேளாளர் ஆகிய மூவகுப்பாரும் சூத்திரராயினர். ஒருசில வணிகரும் பிறரும் தம்மை ஆரிய இனத்திற் சேர்க்குமாறு பூணூல் அணிந்து கொண்டனரேனும், தமிழரெல்லாம் சூத்திரர் என்னுங் கொள்கை நீங்கியபாடில்லை.

(தேவநேய பாவாணர் - மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை பக். 191)


முற்க்காலத்தில் மூவேந்தர்கள் தான் சார்ந்த உழுவுக்குடியிலேயே பெண் எடுத்தனர். ஆனால் பிற்க்கால வேந்தர்கள் தான் சார்ந்த மள்ளர் குடியை தவிர்த்து மாற்றுக்குடியிடம் பெண் எடுத்ததின் விளைவே மூவேந்தர் ஆட்சி முடிவுக்கு காரணமாக அமைந்தது.

(எழுகதிர் ஆசிரியர் அருகோ)



இவ்வாறு உழக முழுவதும் ஆட்சி செய்த பல மன்னர்கள் வேளாண்குடியிலிருந்து வந்தவர்களாகவும், தாங்களே உழவு தொழில் செய்தவர்களாகவும் இருந்துள்ளனர் என்பதை சான்றுகள் நமக்கு தெளிவாக காட்டுகிறது.


                                                                                            (தொடரும்)