Wednesday, 5 October 2016

பகுதி 5 'வேளிர் என்போர் உண்மையில் யார்?' என்பது பற்றிய வரலாற்றுத் தேடல் - Pandyan Mallar


புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றுார் குடுமியான் மலை. இது முது குடுமிப் பெருவழுதி என்னும் குடும்பியர் குலத்தோன்றல் பாண்டிய வேந்தரின் பெயரால் ஏற்பட்டிருக்க வேண்டும். இவ்வூரின் மேற்கே 25 கி.மீ தொலைவில் உள்ளது தமிழ்க்கலை மணக்கும் கொடும்பாளூர். இப்பகுதியில் இருங்கோவேளிர்கள் வாழ்ந்திருந்தனர் என்பதை அப்பகுதியிலுள்ள கல்வெட்டுக்கள் காட்டுகின்றன. பிற்காலத்தே அவர்கள் இருக்குவேளிர் எனத் தம்மைக் கூறிக் கொள்வாராயினர். 



முற்காலப் பாண்டியர், சோழர் கல்வெட்டுக்களிலும் குடுமியான் மலை குன்றியூர் நாட்டில் அடங்கியிருந்தது என்று அறியலாம் (பு. கோ. க. - 238, 34, 57). பிற்காலக் கல்வெட்டுக்களில் இவ்வூர் கோனாட்டில் அடங்கியதாகக் கூறப்படுகிறது. கோனாடு என்பது சங்ககாலத்திலேயே இருந்துள்ளது. புறநாநூற்றில் கோனாட்டு எறிச்சிலுார் மாடலன் மதுரைக் குமரன் என்னும் புலவர் குறிக்கப்படுகிறார்.



இக் கோனாடு என்பது புறநாநூற்றில் பாடப்பெற்ற இருங்கோவேளின் பெயரால் இருங்கோனாடு என்று வழங்கியதன் சுருங்கிய வடிவமே என்பார் திரு. சுப்பாராயலு. ஆனால் இக் கோனாடு கி. பி. 988 - இல் தான் முதன்முதலில் கல்வெட்டில் குறிக்கப்படுகிறது. முதல் இராஜராஜன்தான் நிர்வாக எளிமைக்காக தன் நாட்டை பல பிரிவுகளாகப் பிரித்து வளநாடு என்றும், நாடு என்றும் பெயரிட்டான். அப்போது இக்கோனாடு கேரளாந்தக வளநாட்டின் ஒரு பிரிவாக இருந்தது. கி.பி. 1056 -க்குப் பிறகுதான் இது தனியே பிரிந்து இரட்டப்பாடி கொண்ட சோழவளநாடு என்று பெயர் பெற்றது. அதுவே பின்னர் கடலடையாதிலங்கை கொண்ட சோழ வளநாடு என்றும் அழைக்கப்பட்டது. இக் கோனாடு பிற்காலத்தில் தென் கோனாடு, வட கோனாடு என்ற பிரிவுகளும் கொண்டது. ( சொ. சாந்தலிங்கம் -  குடுமியான் மலை )


சோழர்களின் எழுச்சிக்குப் பிறகு அவர்களுக்கு உட்பட்டே முத்தரையர்கள் ஆண்டுவந்துள்ளனர். சுந்தர சோழன் காலத்தில் புதுக்கோட்டை பகுதியில் ஆண்ட முத்தரையர்கள், செம்பியன் இருக்குவேளானுக்குப் பெண் கொடுத்து மண உறவு வைத்துக் கொண்டனர் என்று குடுமியான் மலைக்கல்வெட்டு (பு.கோ.க. 45) கூறுகிறது.



கொடும்பாளூர்க் மூவர் கோயில் கல்வெட்டு (பு.கோ.க 14) ஒன்றின் மூலம் இவ்வேளிர்களின் எட்டுத் தலைமுறையினரை அறிந்து கொள்ள முடிகிறது. பரவீரஜித், வீரதுங்கன், அதிவீர அனுபமன், சங்ககிருதன், நிருபகேசரி, பரதுர்க்க மர்த்தனன், சமராபிராமன், பூதிவிக்ரமகேசரி என்ற பெயர்களே அவை. இருங்கோவேள் என்பதே நாளடைவில் இருக்குவேள் என ஆயிற்று என்பர். ( சொ. சாந்தலிங்கம் -  குடுமியான் மலை )



இவ்விருக்குவேளிர் கொடும்பாளூரைத் தலைநகராகக் கொண்டு கோனாட்டை ஆண்டு வந்தனர். பல்லவரையும், பாண்டியரையும் போரில் வென்று காவிரியை இரத்த ஆறாக்கினர் என்று கொடும்பாளூர்க் கல்வெட்டு கூறும். தஞ்சையில் சோழ அரசர்களின் எழுச்சியில் முக்கிய பங்கு பெற்றவர்கள் இவர்கள். இருக்குவேளிரின் உதவியின்றிப் பெருஞ் செல்வாக்குப் பெற்றிருந்த முத்தரையர்களை விஜயாலயன் வென்றிக்க முடியாது என்பர் வரலாற்றறிஞர்.



சமராபிராமன் என்னும் இருக்குவேளிர் மன்னனே விஜயாலயனுக்கு உதவியவன். அதற்குக் கைமாறாக விஜயாலயன் இவனைக் கொடும்பாளூர்த் தலைவனாக்கி, குமராங்குசனின் வழிவந்த அனுபமா என்ற சோழ அரசியையும் மணமுடித்து வைத்தான். இருக்குவேளிர் முத்தரையர்களோடு மணவுறவு கொண்டனர். இவர்களின் கோயிற்பணிகளில் மிக முக்கியமானது கொடும்பாளூரில் பூதி விக்கிரம கேசரியால் எடுக்கப்பட்ட மூவர் கோயிலாகும். பல கோயில்களுக்கும் பல்வேறு கொடைகள் அளித்துள்ளனர் குடுமியான்மலைக் கல்வெட்டுகள் மூலமும் இவற்றை அறியலாம். இவர்கள் சோழர்களின் ஆட்சிக்காலத்தில் படைத்தலைவர்களாவும் முக்கிய அதிகாரிகளாகவும் விளங்கினர். செம்பியன் இருக்குவேளார், மகிமாலய இருக்குவேளார், வீரசோழ இளங்கோ வேளார் போன்றவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள். (சொ. சாந்தலிங்கம் -  குடுமியான் மலை )




சோழப் பேரரசர்களுடன் இருந்தச் சிற்றரசர்கள் நடந்து கொள்ளவேண்டிய முறையை ஒழுங்குபடுத்தும் அரசியல் உடன்பாடுகளையும் அவர்கள் தங்களுக்குள் செய்துகொண்டார்கள். இந்த உடன்பாட்டால், சோழப் பேரரசோடு படிப்படியாக வளர்ந்த அதிகாரிகளும் செல்வர்களும் காலப்போக்கில் உள்ளூர்களிலே சிறுசிறு தலைவர்களாகவும், பிறகு உரிமை முறை கொண்டாடும் அளவில் செல்வாக்கும் பெற்று, சிற்றரசர்கள் போல விளங்குவாராயினர். அந்த உடன்பாட்டின் சரத்துக்கள் விளக்கும் ஒரு கல்வெட்டு செய்தி உள்ளது. அதில் சுந்தன் துவராபுரி வேளான் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.



முதலாம் குலோத்துங்கனின் 42-ம் ஆட்சி ஆண்டில், இராமநாதபுரம் மாவட்டம் சிவபுரியில் உள்ள ஒரு கல்வெட்டில் சோழ வேந்தர்களுக்கும் துவராபுரி வேளிர்களுக்கும் உள்ள நட்பு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் சுந்தரத் தோழன் கந்தன் என்ற இராஜேந்திரச் சோழ துவாரபதி வேளான் என்பவனுக்கு நட்பாகவும் விசுவாசமாகவும் நடந்து கொள்ளுவதாகக் கந்தன் மங்களத் தேவன் என்ற துவாரபதி வேளான் என்பவன் சத்தியம் செய்து கொடுத்திருக்கிறான். சத்தியத்தின் வாசகம் வருமாறு:


உங்களுடைய உயிர்க்கும் சொத்துக்கும் மரியாதைக்கும் பங்கம் வராமல் நேர்மையாயும் நாணயமாயும் நான் நடந்துகொள்வேன் என்றும், அவ்வாறு நான் நடக்கத் தவறினால், தன்னுடைய தாயாரின் கணவனாக நடந்து கொண்ட பாவம், கள் முதலிய குடி வகைகளை உட்கொண்ட பாவம், பசுவின் இறைச்சியை உட்கொண்ட பாவம் ஆகிய பாவங்களைச் செய்தவன் ஆவேன் என்றும், கந்தன் மங்களத் தேவன் என்ற துவாரபதி வேளான் ஆகிய நான் இதன் மூலம் சத்தியப் பிரமாணம் செய்து கொடுக்கிறேன்.”  ( ARE. No. 65 / 1929 கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி – சோழர்கள் பக். 513)


பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, அதே இடத்தில் இன்னொரு உடன்பாடு காணப்படுகிறது.  இது, இராஜேந்திரச் சோழன் என்ற நிசடராஜன், கந்தன், சுந்தரத் தோழன் என்ற துவாரபதி வேளானுக்கு விசுவாசமாயிருப்பதாக, முந்தின வாசகங்களில் சத்தியம் செய்து கொடுத்தது போன்றதாகும்  ( ARE. No. 55 / 1929 கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி – சோழர்கள் பக். 513)


இவ் வேளிர்கள் பசுவின் இறைச்சியை உட்கொல்வது பாவம் என்ற ஒரு முக்கியமான செய்தியை குறிப்பிட்டுள்ளனர். ஏனெனில் அக்காலத்தில் பல்வேறு இனக்குழுக்கள் நாட்டில் இருந்திருக்கின்றன. அன்றிருந்த மக்களுள் எயினர் வேட்டையாடியும், சூறையாடியும், பசுக்களையும், எருதுகளையும் கவர்ந்து அவற்றைக் கள்ளுக்கு விற்று, அல்லது அவற்றைக் கொன்று ஊனைத் தின்று வாழ்க்கை நடத்தி வந்தனர்.


மழவர் பசு ஊனைத் தின்றனர் என்பது

"கொழுப்பு ஆதின்ற கூர்ம படைமழவர்
செருப்புடை அடியர் தெண்சுனை மண்டும்
அருஞ்சுரம் அரிய வல்ல ; வார்கொல்"        (அகம் 123 / 12 / 14)



“பல் பூங்கானத்து அல்கு நிழல் இசை இத்
தோகைத் தூவித் தொடைத்தார் மழவர்
நாகு ஆவீழ்த்து திற்றி தின்ற"                         (அகம் 249 / 11 - 13)

                                என்ற மேற்கோள்களால் புலனாகும்.

அக்காலத்தில் காட்டு வாணர் பச்சை ஊனைத் தின்றனர் என்பது

“நிறுத்த ஆயம் தலைச்சென்று உண்டு
 பச்சூன் தின்று பைந்நிணம் பெருத்த “         (புறம் 258 / 3, 4)

                    என்ற மேற்கோளால் விளங்கும்.



மழவர், காட்டு வாணர் மாட்டு இறைச்சியை உட்கொண்டவர்கள் என இலக்கியம்  தெளிவாக கூறுகிறது.  ஆதலால் மழவர் மற்றும் காட்டு வாணர் போன்ற முல்லை நில குடிகளும், பசுவின் இறைச்சியை உட்கொல்வது பாவம் என கருதும் மருதநில குடிகளான வேளிர்களும் வெவ்வேறு சமூகத்தவர்கள் என உறுதிபடக்கூறலாம். மழவர், வாணர் முறையே பிற்க்காலத்தில் மழவராயர், வாணராயர் என்று அழைத்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.




துவராபதி வேளான் பள்ளன் சுன்டன் சந்ததியர் பற்றி மேலும் சில வரலாற்று குறிப்புகள்  கொண்ட கல்வெட்டுகள் கொங்கு பகுதியில் கிடைக்கின்றன. அவர்கள் அப்பகுதியில் ஆட்சி செய்தார்கள் என்பதற்க்குச் சான்றாக அமைகிறது. அவற்றை  கீழே காண்போம். 


சோழ வேந்தர்களில் முதலாம் ஆதித்தனுடைய மகன் முதற் பராந்தகன் கி.பி. 907-இல் ஆட்சிக்கு வந்தான். இவனுக்கு வீரசோழன் என்ற பட்டப் பெயர் உண்டு. இவன் கொங்கு நாட்டைக் கைப்பற்றிய போது கோனாட்டு அரசர்களான இருக்குவேளிர்களில் ஒரு பிரிவினரை சுய ஆட்சி பெற்ற கொங்குச் சிற்றரசர்களாக நியமித்தான். (கே.வி. சுப்பிரமணிய அய்யர் (Historical sketches of Ancient Dekhan) தொகுதி II, பக். 67). மேலும் முதலாம் இராஜேந்திர சோழன் கொங்கு நாட்டு அரசனுடைய மகளை மணந்து கொண்டான் என்றும் கே.வி. சுப்பிரமணிய அய்யர் கூறுவார்.


கொங்குச் சோழர்கள் கோனாட்டு இருங்கோளர் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என புவனா சீவானந்தம் கூறுவார் (புவனா சீவானந்தம் -கொங்குச் சோழர்கள்)




குடும்பர் சுந்தன் அதிசய சோழனான குலோத்துங்க சோழ இருங்கோளர்

கொங்குச் சோழ மன்னன் வீரராஜேந்திர தேவர் (கி.பி. 1206 -  1252) ஆட்சி செய்த காலத்தில் கொங்கு நாட்டில் பொங்கலூர்கா நாட்டில் கீரனூர் பகுதியில் ஆட்சி செய்த சிற்றரசர் (அதிகாரி) மள்ளர், குடும்பர் எனும் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த சுந்தன் அதிசய சோழனான குலோத்துங்க சோழ இருங்கோளர் ஆவர். இவருடைய மணவாட்டி பெயர் இளையாண்டி. இவர் கொண்டுள்ள பெண்டுகளில் ஒருவர் கருவூர் ஆந்நிலை ஆண்டார் அரவி கூத்தாண்டி ஆகும். திருமணம் செய்து கொண்ட மனைவி பட்டத்து அரசி மணவாட்டி என்றும், கூடுதலாக மனைவியாக வைத்துக் கொள்ளப்பட்டவர் பெண்டு என்றும் குறிப்பிடப்படுகிறார்கள் எனலாம். இந்தக் குடும்பருக்கு கொழுமங்கொண்ட சோழநல்லூர் உடையார் என்ற பட்டமும் உள்ளது. கொழுமங் கொண்ட சோழநல்லூரும் (கீரனூர்) இவருடைய ஆட்சியின் கீழ் இருந்தது.

பொங்களூர்கால் நாடு என்பது பல்லடம், செலக்கிரிச்சல், கீரனூர், கொழுமம் முதலிய பல ஊர்களை உள்ளடக்கியது ஆகும். கீரனூர் மையமாக உள்ளது. குடும்பர்களாகிய கொங்குச் சோழர்கள் காலத்தில் புகழ்பெற்ற மேலைச் சிதம்பரம் என்னும் கோயமுத்தூர் பேரூர் பட்டீசுர மள்ளர் கோயில் கட்டப்பட்டது. பட்டீசுர மள்ளர் கோயில் கட்டிய காலத்திலேயே மள்ளர், குடும்பர் எனும் தேவேந்திர குல வேளாளர்களுக்கும் கோயில் அருகிலேயே ஒரு மடமும் கட்டப்பட்டது. அந்தத் தேவேந்திரர் மடம் இன்றும் தேவேந்திர குல வேளாளர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. கோயிலிலும் இன்றும் கோயில் விழாக்களில் தேவேந்திர குல வேளாளர் பட்டக்காரர்களே முன்னிலைப்படுத்தி முதல் மரியாதை அளிக்கப்படுகிறார்கள்.

குடும்பர் சுந்தன் அதிசய சோழனான குலோத்துங்க சோழ இருங்கோளரும் அவரது பெண்டான கருவூர் ஆந்நிலை ஆண்டார் அரவி கூத்தாண்டியும் மண வாட்டியான இளையாண்டியும் ஆட்சி நிர்வாகத்திலும் ஆன்மீகத்திலும் சிறந்து விளங்கினர். கோயில்களுக்குத் திருப்பணிகள் பல செய்துள்ளனர்.

கீரனூரில் உள்ள திருவாகிசுவரர் கோயில் தெற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு ஒன்று இந்தக் குடும்பர் திருவாகீசுவரர் கோயிலில் நாட்டியப் பயிற்சி நடைபெறுவதற்காக இருகலம் நெல் விதைப்பாடு உள்ள நஞ்சை நிலத்தை நட்டுவப் புறமாக விட்ட செய்தியைத் தெரிவி க்கிறது.


கல்வெட்டு வாசகம்:
  1. ஸ்வஸ்திஸ்ரீ வீரராஜெந்திர தெவற்க்கு யாண்டு பத்தாவது பொங்கலூற்கா நாட்டு
  2. கிரநூர் குடுமரில் சுந்தன் அதி(ச)ய சொழநாந குலோத்துங்க சொழ இருங்கொ
  3. ளநென் இந்நாயநா(ர்) திருவாகீஸ்வரமுடையாற்கு நட்டுவப் புற(த்து)க்கு வி
  4. ட்ட நிர் நிலமாவதுக்கு நான்கெல்லையாவது எந்நிலத்து…
  5. குளத்தில் மெத்தலை எரிக்கு மெற்கும் கிழ்மேல் ப
  6. (ழு)ர் வாக்காலுக்கு தெற்கும் ஆக
  7. நெல்விதை இருகலமும் நட்டுவப்புற
  8. (ம்)மாக இட்டுக் கொடுத்தேன் சுந்தன் அதி(ச)ய சொழநாந குலோத்துங்க சொழ இருங்
  9. கொளநெந்   ஸந்திராதித்தவற் இந்நிலம் இடநைமாராய
  10. த்துக்கு பன்மாஹெசுர ரச்சை
(தென்னிந்தியக் கல்வெட்டுகள் (S.I.I) தொகுதி 5, எண் 278, மற்றும் A.R.No. 602 of 1893)

இக்கல்வெட்டு கி.பி. 1216 - ஆம் ஆண்டை சேர்ந்ததாகும். குடும்பர் என்பது குடுமர் என்று குறிக்கப்பட்டுள்ளது.

கொழுமங்கொண்ட சோழநல்லூர் உடையார் குடும்பரின் பெண்டான கருவூர் திரு ஆந்நிலை ஆண்டார் அரவிகூத்தாண்டியின் கொடை

கீரனூருக்கு கொழுமம் கொண்ட சோழ நல்லூர் என்ற பெயரும் உள்ளது. கொழுமங் கொண்ட சோழ நல்லூர் உடையார் குடும்பர் சுந்தன் அதிசய சோழனான குலோத்துங்க சோழ இருங்கோளரின் பெண்டுகளில் கருவூர் திரு ஆந்நிலை ஆண்டார் அரவி கூத்தாண்டி, கீரனூர் மகாதேவர் திருவாகிசுவர முடையார் கோயிலில் கூத்தாடுந் தேவர்க்கு அமுது படைப்பதற்காக நிலம் தானமாக வழங்கினார். இது வீரராஜேந்திர தேவரின் 7 - ஆம் ஆட்சியாண்டு (கி.பி. 1218) வழங்கப்பட்டது எனக் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

கல்வெட்டு வாசகம்
  1. ஸ்ரீ கோ இராசசெகர பன்மரான திரிபுவனச்சக்கரவத்திகள்
  2. ஸ்ரீ வீரராசெந்திர தெவற்க்கு யாண்டு எழாவது பொங்க
  3. லூர்கால் நாட்டுக் கிர(ந்)நூராந கொழுமங்கொண்
  4. ட சோழநல்லூர் மஹாதெவர் திருவாகிச்சுர மு
  5. டையார் கொயி(ல்)லில் கூத்தாடுந் தெவற்கு திரு
  6. நாயற்று கிழமைக்கு பிட்டமுது செய்தரு(ள்)ளு
  7. கை(க்)கு குலொத்துங்க சொழ இருங்கொளர் பெண்டு
  8. க(ள்)ளி(லி)ல் கருவூர் திருஆந்நிலை ஆண்டார் அ…….. அ
  9. ரவி கூத்தாண்டியேந் இட்ட நிலம் கொங்கூர் குளத்துக்
  10. கிழைத்தூம்பில் மெலைக்களரில் பள்ளக்கவருக்கு தெற்
  11. கும் மன்றாடி சொழகோன் செய்க்கு வடக்கும் பூவநாருடை
  12. மக்காவந் செய்க்கு கிழக்கும் உடையார் குலொத்துங்
  13. க சொழ இருங்கொளர் நிலத்துக்கு மேற்கு நிலம் அரை
  14. மாவும் கல்வெட்டிக் குடுத்தென் கூத்தாடியேந் சந்
  15. திராதித்தயவரை செல்ல இது பன்மாஹெஸ்வரர் ரசை
 (தென்னிந்தியக் கல்வெட்டுகள் (S.I.I.) தொகுதி 5, எண் 273 மற்றும் A.R.No. 597 of 1893)


குடும்பரின் மணவாட்டி இளையாண்டி கொடுத்த பொன் ஆபரணங்கள்

கொழுமங்கொண்ட சோழநல்லூர் உடையார் குடும்பர் சுந்தன் அதிசய சோழனான குலோத்துங்க சோழ இருங்கோளரின் மணவாட்டி இளையாண்டி திருவாகீஸ்வர முடையார் திருப்பள்ளியறை நாச்சியாருக்கு பொன்னாபரணங்கள் கொடுத்தது பற்றிய செய்தி கி.பி. 1217 ஆண்டுக் கல்வெட்டில் கொடுக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு வாசகம்
  1. ஸ்வத்ஸிஸ்ரீ திரிபுவநச் சக்ரவத்தி
  2. கள் ஸ்ரீவீர ராஜெந்திர தெவற்கு யா
  3. ண்டு பதிநொன்றாவது பொங்கலூ
  4. க்கா நா(ட்)டு கிரநூரான கொழுமங்
  5. கொண்ட சொழநல்லூர் உடையா
  6. ர் சுந்தந் அதிசய சொழநாந குலோத்
  7. துங்க சொழ இருங்கோளந் மணவாட்டி இளை
  8. யாண்டியேந் உடையார் திருவாகீஸ்வரமு
  9. டையார் திருப்பள்ளியறை நாச்சியாற்குச் செய்வி
  10. த்துக் குடுத்த பொற்பணி திருச்சரி ஒரணை திருப்பாட
  11. கம் ஓரணை மச்சம் ஒரு காணம் ஆகப் பொந் பதிந்
  12. நாற்கழஞ்செ ஒரு காணம் நகரப்பொந் ஆணியோ
  13. டொத்த பொந்நுக்கு காணவாசி நல்ல பொந்
  14. இப்பணி இரண்டும் நித்தஸித்தமாக நாச்சியார்
                                                                                             
(தென்னிந்தியக் கல்வெட்டுகள் (S.I.I.) தொகுதி 5, எண் 266 மற்றும் A.R.No. 590 of 1893)


                                                                                            (தொடரும்)
  

No comments:

Post a Comment